Tuesday 17 November 2015

I Love you forever Mom

 







     அம்மாவிற்காக நானே உருவாக்கியது...

Friday 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. பள்ளிகளில் மதிய நேரத்திற்குப் பிறகு பள்ளி புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும்.

2.எல்லோர் வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும்.

3.5ம் வகுப்பு முதல் அனைவருக்கும் பள்ளியே ஒரு மடிக்கணினி தந்து இணைய இணைப்பும் தர வேண்டும்..( வலை தளங்கள் படிக்கத் தான்..ஹி..ஹி..)

4. யார் யாருக்கு எந்த எந்த துறை பிடிக்கிறதோ அந்த அந்த துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும்.

5. அனைத்து நாடுகளுக்கும் பள்ளியிலிருந்தே அழைத்துச் செல்ல வேண்டும்.(செலவு அரசு செய்ய வேண்டும்..மிக்ஸி கிரைண்டர் கொடுப்பதற்கு பதில் இதனைச் செய்யலாம்)

6. வாரம் ஒரு சினிமா கூட்டிப் போக வேண்டும். ( மரத்தைச் சுத்தி சுத்தி பாடும் காதல் படங்கள் அல்லாமல் பயங்கர திரில்லர்.அட்வெஞ்சர் அப்படி இருக்க வேண்டும்.

7. பத்தாம் வகுப்புக்கு மேல் கார் ஓட்ட, பைக் ஓட்ட, விமானம் ஓட்ட என்று அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக் கற்றுத் தர வேண்டும்..( இந்த செலவும் அரசின் உடையதே...அதான் நிறைய டாஸ்மாக் ல வருமானம் வருதில்ல)

8. பாடகர்கள், ஞானிகள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், வாழ்வில் வெற்றி பெற்றோர்களோடு நாங்கள் உரையாட, வழிவகை செய்ய வே\ண்டும்.

9.நான் நினைப்பதெல்லாம் எனக்குச் சாப்பிடக் கிடைக்க வேண்டும்.

10. வீட்டுக்கு வந்ததும் அம்மா, அக்கா, அப்பா, மூவரும் என்னோடு இருக்க வேண்டும்

***************************************************************************

கில்லர்ஜி அங்கிள் யாரையும் எனக்கு இணைக்கத் தெரியவில்லை. அப்படியே நான் இணைத்தாலும் என் வேண்டுகோளுக்கே காது கொடுத்து கேட்க மாட்டாங்க...அப்புறம் கட்டளைக்கு....அதனால் நான் யாரையும் இணைக்க வில்லை...( ஏதோ பச்சைப் புள்ள எழுதுது நு வந்து பாக்குறாங்க..அவ்ளோதான்...)

நன்றி...

கோர்த்து விட்ட அப்பாவுக்கு....

நற...நற....( நன்றினு சொல்ல வந்தேன்)

**********************************************************************************

Thursday 12 November 2015

விட்டாச்சு லீவு...

கோலாம்பஸ் கோலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக்கண்டு பிடிச்சுக்  கொண்டா ஒரு தீவு. என்று துள்ளிக் குதித்து ஓடி வந்தேன் வீட்டுக்கு.. இது நடந்தது நான் பத்தாம் வகுப்பு முடித்ததும்...அப்பப்பாஎன்ன டார்ச்சர். அப்போ படி. இப்போ படி...அதைப் படி..இதைப்படி..இப்படி படி...அப்படி படி...என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சொல்லி என்ன ரகளை பண்ணாங்க...( இவ்ளோ கெடு பிடிலயும் நான் வழக்கம் போல் கதை, கட்டுரை புத்தகங்கள் தான் படித்தேன் என்பது வேறு விஷயம்) ஆனா இனி ஒரு மூணு மாசத்துக்கு எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல..அதான் இந்த சந்தோஷம்...

எனக்குள் அவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..அப்பாவை சிங்கப்பூர் கூட்டிப் போகச் சொல்லணும். அந்தமான் அம்மா மட்டும் போய் வந்துட்டாங்க...நான் போகணும். தீவு என்றால் எப்படி இருக்கும்? நான்கு பக்கங்களிலும் கடல் தண்ணீட்...தண்ணீர்...எவ்வளவு ஜாலி...என்று நினைத்து தான் கற்பனைகள் பற்பல கோட்டை கட்டி வைத்திருந்தேன்.

அக்காவின் மேற்படிப்பு, எனது எதிர்காலம் என்று சென்னை வர வேண்டும் என்று வீட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. என்னைச் சின்னவள் என்று தவிர்த்து அக்காவின் வேண்டுகோளின் படி( எனக்குத் தெரியும் சத்தியமா அது கட்டளை..ஆணை...உத்தரவு....ஆனா சொன்னா நம்பவா போறீங்க??) சென்னை போவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் என்ன என் கனவு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

நானும் சென்னைக்கு அழைத்து வரப் பட்டேன்...( இல்லை இழுத்து வரப் பட்டேன்) அக்கா..ஏய்...இங்கே புது ஸ்கூல் அங்கே மாதிரி இங்கே தெரிஞ்சவுங்க கிடையாது. நம்மைப் பற்றி நம் ஊரில் தெரியும். ஆனால் இந்த ஊருக்கு நிரூபிக்கணும் அதனால் ஒரு நான்கு ஸ்கூலுக்காவது நீ நுழைவுத் தேர்வு எழுதணும்...அதற்குப் படி என்று சொன்ன கையோடு அவளுடைய புத்தகங்கள் எடுத்து வந்து எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்..

வீட்டில் இவள் தான் ஆட்சியரின் அதிகாரங்களை ஒட்டு மொத்தமாய்ப் பெற்றவள் என்பதால், அம்மாவும் அப்பாவும் ஆமாம்டா..அக்கா சொல்படி கேட்டு அக்காட்ட படிச்சுக்கோ..என்று சொல்லி விட மீண்டும்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

(ஆனா இப்படி கதை புத்தகங்கள் படிச்சே..478 மார்க் வாங்குன நான் முழுமையா படிச்சிருந்தா, இன்னும் கொஞ்சம் அக்கா மாதிரி அதிகம் வாங்கி இருக்கலாம்.அது வேறு விஷயம்)

அடிக்கடி எனக்கு என் பொம்மைகளோடு பேசும் பழக்கம் உண்டு. ஏனென்றால் அது தான் எதிர்த்துப் பேசாது. அடிக்காது, தண்டிக்காது. கண்டிக்காது. டூ விடாது. சொன்னதை வேறு ஒருவரிடம் வேறு மாதிரி சொல்லிப்,  போட்டுக் கொடுக்காது. இப்படி பல வசதிகள் கொண்டதால் நான் அவைகளிடம் பேசிக் கொண்டிருப்பேன். ( என்னாது..? அவைதான் திருப்பி பேசாதுல்ல..என்று கேட்டால் அதற்காகவும் தான் அவைகளுடன் நான் பேசுவேன்)

அப்படி சிந்து என்று பெயர் கொண்ட பொம்மையிடம் புலம்பித் தீர்த்தேன். அப்பா, தீவுக்குக் கூட்டிப் போங்கள் என்றால் நட்பு இல்லாத ஒரு தீவுக்குக் கொண்டு வந்து விட்டுப் போறார்னு சொன்னேன். அது எதுவும் கடவுளிடம் சொன்னதோ என்னவோ,

 நேற்று மழை..மழை...மழை...இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றால் , அம்மாவும் அப்பாவும் இந்த வீடு வாடகைக்குப் பிடித்து, அக்காவுக்கு கட்டணம் கட்டி, எனக்கும் கட்டணம் கட்டி, பாவம் என்று நானே அந்தத் திட்டத்தை மறந்து விட்டேன். ஆனால் பாருங்க...நான் தீவு போகணும்னு சொன்னேன்ல...இன்னைக்கு தீவே எங்க வீட்டு பக்கத்துல வந்திருச்சு. வீடு சுத்தியும் தண்ணீர்..தண்ணீர்.. தீவுக்குப் போயிருந்தால் ஒரு கப்பலில் தான் போயிருக்க முடியும். இன்று என்னைப் போன்றவர்களால் இன்று இந்த நகர் முழுவதும் கப்பல்கள்..காகிதத்தில்.

காகிதங்களைக் கப்பலாக உருவகமாக்கியதால்...வழக்கம் போல் இதுவும் தத்துவம் தாங்க...


Saturday 7 November 2015

உப்பில்லாப் பண்டம்

இதுவரை நீங்கள் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றே தான் படித்திருப்பீர்கள். ஆனால் இனி அதனை மாற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு...

இனி இப்படித் திருத்திக் கொள்ளவேண்டும் உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பதை உப்பில்லாப் பண்டம் சூர்யாவின் தொப்பையிலே என்று சொன்னால் போதும்..

விடுமுறை நாட்களின் சில தினங்களில் கூடுதல் நேரம் அம்மா தூங்க நேர்ந்தால் முதல் நாள் சாதம் வைத்து வத்தக்குழம்பும் செய்து வைத்துவிட்டுப் படுத்துவிடுவார்கள். மறுநாள் காலை 8 மணிக்கு மேல் தான் விழிப்போம். உடனே பசிக்குமாதலால் இந்த ஏற்பாடு. அம்மா அதற்கு பொட்டுக்கடலை துவையல், அப்பளம், வடை இவ்வளவும் செய்திருப்பார். பழைய சாதத்தில் தயிர் கலந்து ஒரு உருண்டைக்கு வத்த குழம்பு, ஒரு உருண்டைக்கு துவையல், அப்பளம், வடை என்று சாப்பிட பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரி இருக்கும்.அதுவும் அம்மா கையில் அதனை உருண்டையாக்கி கட்டை விடலால் உருண்டையில் ஒரு குழி வைத்து அதில் கரண்டியில் இருந்து சிறிதளவு வத்தல் குழம்பு ஊற்றித் தரும் பக்குவத்தில் .., அப்படியே இரண்டு கிண்ணம் சாதம் சாப்பிட்டு விடலாம்.( உண்மையில் இந்த உருண்டைகளுக்கு ஒபாமா தன் நாட்டை அப்படியே அம்மாவுக்கு தானம் செய்து விடலாம்)

இதெல்லாம் அழகாக நேர்த்தியாகச் செய்யும் அம்மாவிற்கு ஒரு குறை. அது உப்பிட மறந்து போவது. பள்ளிக்கு மதிய உணவாக அம்மா என்ன வைத்திருக்கிறார்கள் என்று ஆவலோடு பிரித்துப் பார்த்தால், சாம்பார் சாதம், பருப்பு சாதம், பால் சாதம் என்று ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தோழிகள் விரும்பும் ஒரு மணத்துடன் இருக்கும்.ஆனால்.தொட்டுக்கொள்ள வைத்த காய்கறியில்...? அதில் உப்பு இருக்காது. அம்மா என்ன வைத்தாலும் அதனை தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று சொல்லி அப்படியே விழுங்கி விட்டு வருவாள்  என் அக்கா சக்தி.என்னால் தான் அப்படி செய்ய முடிவதில்லை.

அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்ததால்,பொருத்துப் பொருத்துப் பார்த்த நான் ஒரு சிறிய டப்பா வாங்கி அதில் உப்பு கொட்டி நிரந்தரமாக எனது சாப்பாட்டு பையில் வைத்துவிட்டேன்.அம்மா உப்புப் போட மறந்திருந்தாலும் நானாக உப்பிட்டு ஸ்பூன் வைத்துக் கலக்கிச் சாப்பிட ஆரம்பித்தேன்.

இரண்டு பேருந்துகள் மாறி வேலைக்குப் போகும் நிலையில் அம்மா இருந்ததால், பெருந்தன்மையாய் அம்மாவை மன்னித்து ,எனக்கு நானே திட்டத்தில் உப்பு எடுத்துக் கொண்டு போனேன்.

இப்போதும் சில சமயங்களில் அது போன்று நிகழ்ந்து விடுகிறது. இதனால் உப்புக்கும் அம்மாவிற்கும் உள்ள விருப்பு வெறுப்புகள், தன்மைகள், நிலைமைகள், சூழ்நிலைகள் போன்றவற்றை நான் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப் பட்டேன்.

அதனால் தான் இந்த ஆய்வு....

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் நானாக ஆய்வு செய்து அதன்பயனாக விளைந்த முடிவுகள்

1. அம்மாவிற்கு காந்திஜியைப் பிடிக்கும் . எனவே, மகாத்மா ஆன அவரை உப்பிற்காக யாத்திரை செல்ல வைத்ததற்காக உப்பைப் பிடிக்கவில்லை.

2. உப்பின் மீது முன் ஜென்மப்பகை இருக்கிறது. அதனை இந்த ஜென்மத்தில் பலி வாங்க எண்ணி அம்மா சாப்பாட்டில் உப்பை மறக்கிறார்.

3.அம்மா மிகவும் ஒல்லியாக இருந்து இப்போது சற்றே உப்பிப் போனதால், அதற்கு உப்பு தான் காரணம் என்று நினைத்திருக்க வேண்டும், அல்லது உப்பியிருப்பதால், உப்பு என்ற வார்த்தையைத் தவிர்க்க உப்பைத் தவிர்த்திருக்க வேண்டும்.

4. உப்பு தனக்கு எதிரி என்று தப்பாய்க் கணக்கிட்டு, உப்பைப் போடாமல் தப்புப் பண்ணி, தப்புப் பண்ணதை உப்பு வழியாகக் காட்டி உப்பு மறந்து....,,,,, சரி வரல....... விட்டுடலாம்..

5. உப்பு உடம்புக்கு நல்லதில்லை என்று அம்மாவின் பிஞ்சு மனதை யாரோ கலைத்திருக்க வேண்டும்...

இவை எல்லாம் ஆய்வின் அலசல்கள். இன்னும் நான் ஒரு முடிவுக்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் என்னோடு இந்த உப்பு ஆய்வில், பங்கேற்கலாம்...

டிஜிட்டல் இந்தியா, சிங்காரச் சென்னை மாதிரி...உப்பு சார்ந்த சமையல் இருந்தால் தேவலாம்...ஆமாம் தானே????

ஒப்பில்லாத இந்த உப்பு பற்றி எழுதி நான் ஒப்பு உயர்வற்ற தலைவி...இல்லை உப்பு உயர்வு அற்ற தலைவியாக விடைபெறுகிறேன்...

*********************************************************

வழக்கம் போல் இதுவும் தத்துவம் தான் உப்பு உயர்வுத் தத்துவம்...ஹி..ஹி..

உப்பு க்கான பட முடிவு




Monday 2 November 2015

யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்

முதல் நாளெல்லாம் நல்ல மழை...பள்ளிக்குள் இருந்த போது அறிவியலை இன்னும் கொஞ்சம் அறுவையாக்கிக் கொண்டிருந்தார், அதன் ஆசிரியர்.(யை)...(பதவிகளுக்கு பெண்பால் கூடாது என்பதால்)

ஞாயிறின் ஏக்கமும் தூக்கமும் முடியுமுன்பே திங்கள் பிறந்து விட்டது..அடடா..என்று எழுந்து , அவசர அவசரமாக குளித்து, ( குளிப்பது போல் போக்குக் காட்டித்தான்) (நல்ல மழைல யாராவது குளிப்பாங்களா? புரியாத அம்மாவை நினைத்துச் சிரித்துக் கொண்டே) சீருடைக்குள் என்னைத் திணித்து கீழே இறங்கினால் , இன்று கண மழைகாரணமாக விடுமுறை உத்தரவு என்று என் போன்ற பிள்ளைகள் எல்லாம் மழையில் நனைந்து கொண்டே நடந்தும், அப்பாக்களின் பின்னேயும், அம்மாக்களின் பின்னேயும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...

பூத்ததே எனக்குள் ஒரு மத்தாப்பு....நான்கு புத்தகங்கள் இருக்கு படிக்க..( இவை பள்ளி புத்தகங்கள் என்று நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல) நல்ல கதைகள்...அடடா..இன்று பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்து காப்பி குடித்துக் கொண்டே படித்து முடித்து விட வேண்டியது தான், என்று துள்ளிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்...

திடீரென்று பெரிய இடி...மழை வருவதன் காரணமாக வானத்தில் அது நிகழ்ந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் .., மீண்டும் நான் பொறுப்பல்ல..என் அம்மாவின் வாயின் வழியாக என் இதயத்தைத் தாக்கியது அந்த இடி.

அதான் ஸ்கூல் லீவு விட்டாங்கல்ல,இன்னைக்கு ஏதாச்சும் பலகாரம் பண்ணலாமா? அடுத்த வாரம் தீபாவளி, பாரு வீட்டை , நேத்தே துடைச்சிருக்கணும், அம்மாக்கு முடில. துடைச்சிடு.ன்னு சொல்லிட்டு அடுப்படுக்குள் ஒளிஞ்சுகிட்டாங்க. சரிதான் னுசெஞ்சு முடிச்சிட்டு, படிக்கலாம். ரசிக்கலாம், நு வீடை அழகா கூட்டி, துடைச்சு, பளீர் னு வச்சுட்டு நிமிர்ந்தா, அட ரொம்ப அழகா பண்ணிட்டியே. என் செல்லம்ல,னு சொல்லிட்டு மீண்டும் ஒரு இடி..அப்படியே பாத்ரூமையும் கழுவிடு தங்கம் சொல்லி ஒரு முத்தம் வேறு..( அம்மாக்களின் இந்த முத்தத்திற்கு மயங்காத பிள்ளைகள் உலகத்தில் இருக்கா என்ன?)

பாத்ரூமையும் கழுவிட்டுப் பார்த்தா, கட கட நு மணி ஓடிருச்சு. ஸ்கூல்ல இருந்தா இந்நேரம் விளையாட்டு பிரிவேளை. மழைனாலே வெளில் விடாட்டியும், வகுப்புக்கு யாரும் வர மாட்டாங்க..நாங்க, சினிமா கதை, அந்தக் கதை இந்தக் கதை நு சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்திருப்போம்...
ஆனா இன்னைக்கு?????????

சரி நான் தான் இப்படி இருக்கிறேன்  முதல்ல ஒருத்திக்கு போன் பண்ணேன். அவ வீட்டுல முறுக்கு, அதிரசம் எல்லாம் செஞ்சாங்களாம்..செல்லம், தங்கம், அம்முலு, என்று அம்மாக்கள் சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் சொல்லி அவள் அம்மா அவளையும் வேலை வாங்கியிருப்பது கேட்டு அதிர்ந்து  போனேன். 

அதெல்லாம் முடிச்சுட்டு உஸ் அப்பா நு உட்க்கார்ந்தால், அடுத்த மாசம் வர அரைப் பரிச்சைக்கு படி நு சொன்னா, நடத்தாத பாடத்தை, புரியாமலே எப்படி படிக்கிறது? இது கொடுமையால்ல இருக்குனு இன்னொருத்திக்கு போன் பண்ணேன். எங்கம்மா தேவலாம் போல. அவ அம்மா அடுத்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்ஸாம் ல அதுக்குப் படின்னு சொன்னாங்களாம்..(அங்கும் வேலை வாங்கப் பட்டிருக்கிறது).( அடுத்த வருஷம் வரப் போற பரிட்சைய இப்ப எப்படி படிக்கிறது? யாராச்சும் அவங்களுக்குச் சொல்ல முடியுமா என்ன?)

பிள்ளைகள் அடம் பண்றதும், நினைச்சதை நடத்திக் காட்டுறதும் ராஜா சார் பட்டிமன்றத்துல மட்டும் தான் நடக்கும் போல....

காலைலே மாடிக்குப் போய் மழைய பாத்துட்டு வரலாம் மாடிக்குக் கிளம்பினா மழைல நனையக் கூடாதுனு சொன்னாங்க. மதியம் வேலை முடிச்சுட்டுப் போனா , அய்யோ வெயில் அடிக்குது , இப்ப எதுக்கு மாடிக்குனு சொல்லிட்டாங்க.

இதோட போகும் நினைக்காதீங்க...இன்னைக்கு லீவு விட்டதை இன்னொரு நாள் சனிக்கிழமை ஸ்கூல் வைப்பாங்க...இது அதை விடக் கொடுமை...படிக்க வேண்டிய பாடங்களை ஒழுங்கா படிக்க முடியாது. லீவையும் என்ஜாய் பண்ண முடியாது.


அய்யா மழைக்கு லீவு அறிவிக்கிற கலெக்டர்களே...இனி மேலே பச்சைப் புள்ள மாதிரி மழையைப் பாத்ததும் லீவுனு சொல்லாதீங்க. (அதென்னமோ நீங்க லீவு சொல்ற அன்னைகெல்லாம் சொல்லி வைச்சா மாதிரி வெயில் அடிக்கிது...)

இந்தியச் சட்டங்கள் இயற்றும் போது காஷ்மீர் நீங்கலாக நு சொல்ற  மாதிரி, 10,11,12 வகுப்புகள் நீங்கலாகனு , வேனா சொல்லிக்குங்க...

நன்றிங்க...

( இதுவும் கூட தத்துவம் தாங்க...என் தத்துவம்..ஹி...ஹி...)

********************************************************************************